2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sharika Srisiva
Age 7August 23, 2007 – January 22, 2015
- Born in
- Harrow
- Lived in
- Harrow
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceலண்டன் Harrow வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாரிகா ஶ்ரீசிவா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா, அம்மாவின் ஆசைச் செல்ல மகளாய்
உன் அக்காவின் பாசமிக்க ஆசைத் தங்கையாய்
ஓர் பொக்கிசமாய் வாழ்ந்திருந்தாய் !
தென்றல் வீசும் தெருவில், சிங்காரத் தேர் போல்,
சித்திரமாய் சென்று வந்த உன் பாதையும்
22-01-2015 திசை மாறிச் சென்று,
ஈராண்டு ஆனதம்மா!
எம் ஈர விழிகள் காயவில்லை.....
உன் நினைவுகளையும் எங்கள் துயரங்களையும்
கண்ணீரால் மாலையாக்கி உனக்கு சமர்ப்பிக்கின்றோம்
என் உணர்வாய் என் உயிராய்
எனக்குள் உருவாகி வயிற்றில்- அன்று
உன்னை சுமந்தவள் நான் - இன்று
உன்னை எல்லோரும் எம் நெஞ்சினில்
சுமக்கின்றோம் சுகமான சுமையாக...
முழு நிலவாய் ஒளி கொடுத்த
கண்மணியே சாரிகா நீ எங்கே?....
சிட்டாக சிறகடித்து இல்லத்தில் செழிப்போடு
வலம் வந்த எம் சாரிகாக்குட்டியை
கண்ணு வைத்தானோ - அந்த
இரக்கமற்ற கொடிய காலனவன்!
விளையாடி ஆசை காட்டி -நீ
மறந்து சென்ற மாயம் என்ன?....
ஆண்டுகள் இரெண்டென்ன ஆயிரம் தான்
போனாலும் ஆறுமோ எங்கள் மனம்.....
உள்ளம் உறங்கவில்லை உயிரோடு
நடைப்பிணங்களாக வாழ்கின்றோம் !
குட்டியே எம்மை மறந்ததேனோ?....
சின்னஞ்சிறிய உன் கைகள் அளித்த கதகதப்பு
உன் முத்தங்கள் தந்த மகிழ்ச்சி என்றும் அழியாது....
நீ தான் எங்கள் பெரும் அழியாச் சொத்து
என்று நினைத்து இருக்கையில்
உன் நினைவுகளை மட்டுமே சொத்தாக விட்டு
அந்த காலனுடன் சென்ற மாயம் என்ன?....
எம் இரு விழிகளும் உன்னைத் தேடும் பொழுது
எம் இதயம் வலிக்கின்றதே!
உள்ளம் நோக வலி தந்து பிரிந்ததேனடி....
உயிரே ஒரு முறை வாராயோ?
எம் வலிக்கு மருந்தாக.....
நீ சென்று வந்த இடமெல்லாம் - உன்னைத் தேடி
எம் விழிகள் தம்மை மறந்து அலை பாய்கின்றன
ஆனால் எங்குமே பாலை வனம் போல் தோற்றமடி.....
தாங்க முடியவில்லையே.....
பாவியாய் ஆனோமே.....
உன்னைக் காணத் தேடியும் தோற்றோமே....
வாடியும் போனோம் நிற்கதியாய் நிற்கின்றோம்......
ஏழு ஆண்டுகள் எம்மோடு வாழ்ந்தாலும்
செதுக்கிட்ட உன் நினைவுகள் ஏராளம்
நெஞ்சில் வரும் உன் ஞாபகங்கள் தினம் தினம்
தூக்கம் கெடும் பொழுது - எங்கள்
உணர்வுகளும் கலங்குதடி....
மனதின் வலியை கண்கள் மட்டுமே
சொல்லும் அன்பே
தவித்திடும் பொழுது ஆறுதலாய்
உந்தன் நினைவுகள் மீது சாய்கின்றோம்
உந்தன் ஞாபகங்கள் எங்கள் தலையணைப் பஞ்சு
தினம் அதில் தூங்குகின்றோம்....
எண்ணில்லா உன் நினைவுகள் எங்களுக்குள்
ஆறு போல் ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கும்
எம் கையில் முகர்ந்த "சாரிகா" என்னும்
வசந்தத்தை நழுவ விட்டு விட்டு
பேதை கொண்ட நாங்கள் பேதலிக்கின்றோம்
நீ இல்லாத வாழ்வை எண்ணி
பித்தம் தலையேறுவதை யார் அறிவார்?....
மனம் பொறுக்குதில்லையே சாரிகாக் குட்டி!
நீ இல்லாத வீடு வீடாகவே இல்லை
நீ வைத்த பொருட்கள் எல்லாம்
வைத்தது வைத்தபடியே உள்ளன
எல்லா இடத்திலும் உன் வாசம் தான் வீசுகின்றது
நெஞ்சினிலே வலிக்குதம்மா- நீ
கொஞ்சிப் பேசியதும், சிரித்து விளையாடியதும்
உன்னை அழுது தேடுகின்றோம் - உனது
பூ விரல்களால் எங்கள் கண்ணீரைத் துடைப்பதற்கு
உன்னைக் காணவில்லையே......
நீ எங்கு சென்றாய்?.....
நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கின்றது,
உன் வரவை எதிர்பார்த்து......
தவிக்கும்
உன் ஆசை
அப்பா, அம்மா, அக்கா
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

