மரண அறிவித்தல்

செல்லையா கந்தையா
வயது 92, முன்னால் பிஸ்கால் உத்தியோகத்தரும், காட்டா விநாயகர் ஆலய பரிபாலனசபை தலைவர்
- பிறந்த இடம்
- முள்ளியவளை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா கந்தையா அவர்கள் 23-01-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், விஸ்வலிங்கம், தெய்வானை(கண் வைத்தியர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வள்ளிநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற அன்னப்பிள்ளை, பொன்னம்பலம், வினாசித்தம்பி மற்றும் முருகுப்பிள்ளை, இராசம்மா, செல்லம்மா, கனகசபாபதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
சரஸ்வதி(சரஸ்- சுவிஸ், சூரிச்), கருணாகரன்(கண்ணன்), கிருபாகரன்(கிருபா), கைலேஸ்வரி(கைலேஸ்), பாலமனோகரன்(பாலா), சுதர்சினி(சுதா), சஞ்சீதா(வவி), சுகிர்தா(சுகி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்மகுலராசா(குலம்- சுவிஸ், சூரிச்), தனேஸ்வரி(தனேஸ்), சாந்தினி(சாந்தி), முல்லைவேந்தன்(முல்லை), ஜெயராணி(ஜெயா), ஜெயகாந்தன்(காந்தன்), சிவறஞ்சன்(றஞ்சன்), அசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கயல்விழி, மகிந்தபரன், ரூபிஜி, திவ்யன், லக்சியா, லோஜன், கிருஷாந், கிஷோத், ரிஷிகேசன், அபிலன், அபிஷன், ஆரன், அஸ்விதா, அபிநயா, மௌலிகா, ஆதவன், ஆதிரன், சரவணா, சிவாஜினி, சந்தியா, அர்ஜூன், றம்யா, ஓவியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஸ்ரீஷா, நிவிதா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
1926ம் ஆண்டு சித்திரை மாதம் 24ம் திகதி முள்ளியவளையைச் சேர்ந்த செல்லையா சின்னாச்சி தம்பதிகளுக்கு நான்காவது மகனாகப் பிறந்தார் காலஞ்சென்ற செ. கந்தையா அவர்கள்.
காலஞ்சென்றவர்களான ச. அன்னப்பிள்ளை, செ. பொன்னம்பலம் மற்றும் செ. முருகுப்பிள்ளை, காலஞ்சென்ற செ. வினாசித்தம்பி, ம. இராசம்மா, கு. செல்லம்மா, செ. கனகசபாபதி ஆகியோரின் சகோதரர்களாவர்.
முழுக் கதையையும் வாசிக்க
தான் பிறந்த ஊரான முள்ளியவளைக் கிராமத்திலேயே அமைந்துள்ள அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பயின்ற இவர் அதனைத் தொடர்ந்து அக்காலத்தில் ஆங்கிலப் பாடசாலை என்று அழைக்கப்பட்ட இன்றைய வித்தியானந்தக் கல்லூரியில் 8ம் வகுப்புவரை கல்விபயின்றார்.
இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சென்று தனது கல்வியைத் தொடரமுயன்ற இவர் அங்கு ஒருவருடகாலமே கற்றதன் பின்னர் குடும்ப நிலை கருதி கல்வியைத் தொடர முடியாமல் இடை நிறுத்திக் கொள்ள நேரிட்டது. இருப்பினும் வயது வந்தோருக்கான கல்விவாய்ப்பு ஒன்று வித்தியானந்தக் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்ட போது மீண்டும் ஆர்வத்தோடு கல்லூரியில் இணைந்து சிலகாலம் கற்றார். இதுவே அவரை ஆங்கில மொழிப் பரீட்சயம் உள்ளவராகவும் உருவாக வழி வகுத்தது.
இவ்வாறாக அவ்வப்போது கல்வியில் இடையூறுகள் ஏற்பட்ட போதும் முயற்சியைக் கைவிடாது பயின்று தேறியதால் தனது தகமையின் அடிப்படையில் 1958ம் ஆண்டு பிஸ்கால் உத்தியோகத்தராக நியமனம் பெற்றார். உத்தியோகம் கிடைத்த அதே ஆண்டிலேயே விஸ்வலிங்கம், தெய்வானை தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தா. தங்கநாச்சி, வி. சுப்பிரமணியம், வி. பொன்னம்பலம், மற்றும் வி. இரத்தினசிங்கம், காலஞ்சென்ற வி. செந்தில்வேல் ஆகியோரின் பாசமிகு சகோதரியுமாகிய வள்ளிநாயகியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.
காதலித்து மணந்துகொண்ட தனது அன்பு, அழகு, அறிவு, பண்பமிக்க மனைவியோடு
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது” (அதிகாரம்: இல்வாழ்க்கை, குறள்: 45)
இல்லற வாழ்வை இனிதே பேணி வாழ்ந்ததன் பயனாக சரஸ்வதி, கருணாகரன், தனலட்சுமி(இறைபதம்), கிருபாகரன், கைலேஸ்வரி, பாலமனோகரன், சுதர்சினி, சஞ்சீதா, சுகிர்தா ஆகிய ஒன்பது பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர்.
இவ்வாறாக அன்பு மனைவி, பாசமுள்ள குழந்தைகள் என்று வாழ்ந்து வந்த காலஞ்சென்ற செ. கந்தையா அவர்கள் பற்றிய இன்னும் சில விடயங்களை பார்ப்போம்.
1958ம் ஆண்டு பிஸ்கால் உத்தியோகத்தில் இணைந்த இவர் 1972ம் ஆண்டு இலங்கை அரசாங்கம் கொண்டு வந்த அரசகருமமொழிச் சட்டத்தின் கீழ் அனைத்து அரச ஊழியர்களும் சிங்களமொழிப் பாடத் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் என்ற கட்டாய நிலையை எதிர்த்து தமிழ் உணர்வு காரணமாக அவ்வாண்டின் குடியரசு தினத்தன்று தனது உத்தியோகத்தைத் துறந்தார். தனது இனத்தின் மேலும், தனது பிரதேசம் மொழி ஆகியவற்றிலும் மிகுந்த பற்றுள்ளவராக இருந்த இவர் தனது பதவியைத் துறந்தபின் முழுநேர விவசாயியாக மாறிவிட்டார். விவசாயத்தில் மிகுந்த அக்கறையோடு பாடுபட்டு உழைத்து தனது குடும்பத்தை நன்றாய் காத்து வந்தார்.
தான் பிறந்த வன்னிப் பிரதேசத்தின் மீது மிகுந்த பற்றுள்ளவராக இருந்த இவர் தனது பிரதேச மக்களின் பிரதிநிதி வன்னிப் பிரதேசத்திலிருந்தே பாராளுமன்றத்துக்குச் செல்லவேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்ததால் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு தா. சிவசிதம்பரம் அவர்களுக்கு ஆதரவளித்ததோடு அவரது வெற்றிக்காகவும் பாடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயல்பிலேயே கலையார்வம் கொண்ட இவர் வன்னிப் பிரதேசத்தின் கிராமியக்கலைகள் பலவற்றில் திறமை உள்ளவராகத் திகழ்ந்தார். குறிப்பாகக் காத்தவராயன்,கோவலன் கூத்துப்பாடல்களை அதற்கேயுரிய பாணியில் மிகச் சிறப்பாகப் பாட்டுத் திறமை உள்ளவராயிருந்தார். அத்தோடு கோவலன் கூத்துப் பாடல்களை தனக்கே உரித்தான பாணியில் தானே எழுதி ஆவணப்படுத்தியிருக்கின்றார். அக்காலத்தில் இலங்கை வானொலியினால் கிராமியக்கலைகளை ஊக்குவிக்கும் முகமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் முள்ளியவளைக் கிராமத்தின் சார்பாகக் கலந்து கொண்ட கலைஞர்களில் இவரும் ஒருவராயிருந்தார்.
சங்கீதஞானம் உள்ளவராக இருந்த காரணத்தால் தேவார, திருவாசகங்களை முறைப்படி ஓதும் திறமையும் இவரிடமிருந்தது. வற்றாப்பளைக் கண்ணகைஅம்மன் பொங்கல்க் காலம் ஆரம்பமாகி சிலம்பு கூறல் பாடுகின்ற காலத்தில் மிகுந்த பக்திசிரத்தையோடு அப்பாடல்களைப் பாடுவது இவரது வழக்கம். கனடாவுக்குப் புலம்பெயர்ந்த பின்னரும் ஆலய வழிபாடுகளிலும், கிரியைகளிலும் தேவாரதிருவாசகங்களை ஓதும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.
வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் பொங்கல் காலத்தில் தீர்த்த மெடுத்த நாளிலிருந்து பொங்கல் நாள் வரைக்கும் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் தவறாமல் தனது வளவிலேயே அன்னதானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவரது மனைவி காலஞ்சென்ற வள்ளிநாயகி அவர்களும் தன் கணவரோடிணைந்து அக்காலத்தில் வருகின்ற அடியார்களை மிகுந்த அன்போடு உபசரித்து அன்னதானப் பணியைச் செவ்வனே செய்து வந்தமை குறிப்பிடக்கூடிய தொன்றாகும்.
இறைவழிபாட்டின்னால் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தவராகவும், ஆலயப்பணிகளில் ஈடுபாடுள்ளவராகவும் இருந்த காரணத்தினால் முள்ளியவளைக் காட்டா விநாயகர் ஆலயப்பரிபாலன சபைத் தலைவராக விருந்து அவ்வாலய வளர்ச்சிக்குப் பாடுபட்டதோடு கனடாவுக்குப் புலம்பெயர்ந்த பின்பும் காட்டா விநாயகர் ஆலயத் திருப்பணிக்குப் பெரிதும் உதவினார் என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அவ்வாறேவற்றாப்பளைக் கண்ணகைஅம்மன் ஆலயப்பொங்கலை அதேகாலத்தில் கனடாவிலும் நடாத்தவேண்டும் என்றமுயற்சியில் தானும் ஈடுபட்டு இன்றுவரைஅப்பொங்கல் கனடாஐயப்பன் ஆலயத்தில் நடைபெறக் காரணமாகவும் இருந்தவர்.அதுமட்டுமின்றி கண்ணகைஅம்மனுக்கு ஒரு ஆலயத்தைக் கனடா ஐயப்பன் ஆலயத்தினுள் அமைப்பதற்கான முயற்சியில் முன்னின்று பாடுபட்டதோடு அதற்கான நிதியிலும் கணிசமான பங்களிப்புச் செய்தார்.
அமரர் செ. கந்தையா அவர்கள் பிஸ்கால் உத்தியோகத்தராகச் சேவையாற்றிய காலத்தில் பல குடும்பங்கள் சட்டச்சிக்கல்களுக்கு உட்பட்டிருந்த வேளையில் தனது பதவியையும் உயர் அதிகாரிகளது ஒத்துழைப்பினையும் பயன்படுத்தி சமுதாய அக்கறையோடு அவர்களுக்கு உதவி செய்திருந்தார். அதன் காரணமாக அக்குடும்பங்கள் இவரைக் கடவுள் போல் மதித்து நடந்தனர்.
தனது அரச உத்தியோகத்தைத் துறந்து விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வந்த காலத்தில், பொருளாதார ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த போதும் தனது அயராத உழைப்பால் குடும்பத்தைக் கட்டிக் காத்தவர் என்பதோடு தான் சார்ந்திருந்த சமூகத்தில் நாணயமானவராகவும் செயற்பட்டு வந்த காரணத்தால் தனது மகன் வெளிநாடு செல்ல முயன்ற வேளை பலரும் உதவி செய்ய முன்வந்தமையை அமரர் செ. கந்தையா அவர்களது மூத்தமகன்நெகிழ்வோடு நினைவு கூர்வதுண்டு.
அது மட்டுமல்லாது தனது பதவியைத் துறந்த போதும் தான் பதவியில் இருந்த காலத்தில் சம்பாதித்து வைத்திருந்த நன்மதிப்பையும், உயர் அதிகாரிகளோடு இருந்த தொடர்பையும் பயன்படுத்திப் பலருக்கும் உதவி செய்யும் ஒருவராக இருந்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கனடாவில் ஏறத்தாழ 30 வருடகாலம் வாழ்ந்து வந்தகாலத்தில் தனது நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கும், கல்வி வசதியற்ற புலத்தில் வாழும் ஏழைச் சிறுவர்களுக்கும் தன்னாலான உதவிகளை அவ்வப்போது செய்துவந்தார்.
இன்னுமோர் செவிவழித் தகவலாக அமரர் செ. கந்தையா அவர்களின் முன்னோர், வன்னியை ஆண்ட மன்னன் பண்டாரவன்னியனுக்கு உறவுத் தொடர்பு கொண்டவர்களாக இருக்கக்கூடும் என்ற ஊகத்தை வன்னி பற்றிய வரலாற்றறிவு கொண்ட ஒருவர் பகிர்ந்து கொண்டமையையும் இங்கு குறிப்பிடலாம்.
மேலும் இவர் பற்றிய சுவாரஸ்யமான விளையாட்டுத் தகவலாக இதனையும் இங்குபதிவிடலாம். அதாவது, அக்காலத்தில் ஐக்கிய விளையாட்டுக் கழகத்தினரால் வருடப் பிறப்புக் காலத்தில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டியில் முதியவர்களுக்கான தடை ஓட்டப் போட்டியில் பங்கு கொண்டு எப்போதும் முதலிடத்தைத் தட்டிச் செல்லும் விளையாட்டு வீரராகவும் இருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
தனது குடும்பத்தோடு கனடாவுக்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த இவர், தனது அன்பு மனைவியை 2001ம் வருடம் இழக்க நேரிட்டது. அதன் பின்னர் தனது பிள்ளைகளின் ஆதரவோடு வாழ்ந்து வந்த இவர் தனது கணக்கு வழக்குகள் முதற் கொண்டு தேவைகள் அனைத்தையும் வேறெவரது கைகளையும் எதிர்பாராமல் தானே நிறைவேற்றிக் கொள்ளும் பழக்கமுள்ளவராகவும் இருந்துவந்தார்.
தனது பேரப்பிள்ளைகள் மேல் மிகுந்த பாசம் கொண்ட இவர் ஒவ்வோர் வருடநத்தார் தினத்தன்றும், தனது பிறந்த நாளன்றும் அவர்களுக்கு பணப்பரிசு கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்ததால் பேரப்பிள்ளைகள் ஒவ்வொருவரும் அந்தநாளை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். தமதுபாட்டனார் பற்றிக் கூறும் போது மிகுந்த நெகிழ்வோடு இதனை அவர்கள் நினைவுகூர்வதைக் காணக் கூடியதாகவுள்ளது.
இறைநம்பிக்கை, தானம், பரோபகாரம், சமூக அக்கறை, கடின உழைப்பு, கலையார்வம், பாசம், தனித்தியங்கும் திறன் முதலான பல்வேறு அம்சங்களைக் கொண்டவராக, நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து தனது இறுதி நாட்களைக்கூட முன்னரே அறிந்து கொண்ட பக்குவம் உள்ளவராக அமரர் செ. கந்தையா அவர்கள் தனது வாழ்க்கையை வாழ்ந்து முடித்துள்ளார் என்பதே சமூகத்தின் பார்வையாகவுள்ளது.
அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக...!
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

