ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லத்துரை கணேசலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லத்துரை கணேசலிங்கம்

வயது 8228 டிசம்பர், 1937 – 25 டிசம்பர், 2020

பிறந்த இடம்
வேலணை மேற்கு
வாழ்ந்த இடம்
நல்லூர், கைதடி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை மேற்கு சிற்பனை 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும், கைதடியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கணேசலிங்கம் அவர்கள் 25-12-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, பூரணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மீனாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

வேல்வேந்தன்(லண்டன்), அனுச்செல்வன்(இலங்கை), சந்திரிகா(சுவிஸ்), சசிகலா(ஜேர்மனி), சிவகலா(இலங்கை), றசிகலா(லண்டன்), ஜெயகாந்தன்(ஜெய் நியூஸ்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு, அம்பலவாணர்(கனடா), செல்வநாயகி(கனடா), காலஞ்சென்ற சபானாதன்(செவ்வந்தி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஸ்ரீறிராதா(லண்டன்), கௌசலா(ஆசிரியை- யா/கைதடி நாவற்குழி மகா வித்தியாலயம்), ரெட்ணேஸ்வரன்(சுவிஸ்), சிவகுமார்(ஜேர்மனி), செல்வானந்தன்(இலங்கை), ஸ்ரீபதி(லண்டன்), பத்மசிறி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சகுந்தலாதேவி, ரதிதேவி(கனடா), காலஞ்சென்றவர்களான நிற்குணசிங்கம், சொர்ணேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான ராசலட்சுமி, புனிதவதி, சாந்தலிங்கம் மற்றும் சண்முகலிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அபினாஸ், ஆகாஷ், ஆதேஷ், கஷ்வினியா, அரவிந்தன், அனோஜன், அருந்தா, இனியா, சகானா, ஜகினி, ஜாதவி, கேசகி, சுவேதா, வருணன், சுஜிதா, சஜிதா, சகிதா, ஜெய், அபிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

வேலணை மேற்கு சிற்பனை வட்டகையில் ‘இராசா அம்மான்’ என அழைக்கப்பட்டவரும், இளம்பராயம்தொட்டு முதுமைவரை தம் நாளாந்த துரித செயற்பாடுகளின் மூலம் ‘சுறுசுறுப்பு’ எனும் தமிழ்ப்பதத்திற்கு காட்சிவடிவம் கொடுத்தவரும், வைகுண்ட ஏகாதசியும் நத்தாரும் ஒன்றுகூடிய நன்னாளான 25-12-2020ல் தம் மண்ணுலக வாழ்வுக்கு பிரியாவிடை அளித்தவரும், என் உடன்பிறப்பும், அமரர் செல்லத்துரை கணேசலிங்கம் ஆவார்.
இவரின் பாடசாலைக் காலத்தில் ஏற்பட்ட இரண்டாம் உலகப்போரின் தாக்கமும், பணப்பயிர்ச்செய்கைக்கு மாற்றப்படாததால் நிலபுலங்களிலிருந்து வருமானம் குறைந்த நிலைமையும், எமது குடும்பத்தின் சிறப்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்த அன்றாட வாழ்வில் திடீரென பெருஞ்சுமையையும், முதன்முதலான வறுமையின் வாசலையும் காட்டிநின்றது.
ஏழுபேரைக்கொண்ட குடும்பத்தின் அன்றாட வாழ்விற்காய் கைமாற்றுக்கடன்கள், நகை அடகுவைப்புகள், காணி விற்பனவுகள் நாளுக்கு நாள் பெருகலாயின. பிள்ளைகளை உழைப்புக்கு அனுப்பவேண்டிய நிர்ப்பந்தம் தலைதூக்கியது.
இந்நிலையில் ஆரம்பபாடசாலைக் கல்வியைமட்டும் பூர்த்திசெய்திருந்த ராசா, குடும்பத்தின் நல்வாழ்வுக்காய் முதலில் களுத்துறைக்கும், பின்னர் அங்கிருந்து கொழும்பிற்கும் செல்லலானார்.
விற்பனையாளராகப் பெற்ற சிறந்த பயிர்ச்சி, அவரை கொழும்பு கண்ணாஸ்பத்திரிக்கு அண்மித்த இடத்தில், தன் சொந்தக்காலில் சிறுவியாபாரம் செய்யும் முதலாளி ஆக்கியது.
குடும்பப்பழுவை நெகிழ்த்திய ராசாவின் துணிவான செயற்பாட்டால், அவர் தாய் பூரணம்மாவால் கைகொடுத்த தெய்வமெனப் போற்றப்பட்டவர்.
திருமணத்தின்பின்னர் அவரின் ஒன்பதுபேர்கொண்ட குடும்பப்பொறுப்பிலும், அவரது விடாமுயற்சி பளிச்சிடவே செய்தது. 1983கலவரத்தால் தம் கொழும்பு வியாபாரநிலையத்தை இழந்து ஊர்வந்த நிலையில் கூட ஓய்ந்துவிடாது தனது வீட்டின் உட்புற ஓரமாக கடை ஒன்றை அமைத்து அதில் தனக்குப் பரிட்சயமான வியாபாரத்தை தன் ஆண்மக்களை வைத்து நடாத்தி வெற்றியும் கண்டார்.
நாட்டில் நிலவிய கெடுபிடிகளின் மத்தியிலும், அவர் மனையாள் மீனாம்பிகை துணையுடன் நற்பண்புகளோடு வளர்த்தெடுத்த நான்கு பெண்பிள்ளைகளுக்கும், ஊரார் போற்றக்கூடிய நல் வரன்களையும் தேர்ந்தெடுத்தார். அவரின் ஆண்மக்கள் திருமணங்களும் அவ்வாறே பூர்த்தியுற்றன.
இராசா அம்மான், சயிக்கிளோ பிற வாகனங்களோ ஓடாவிடினும் சலிப்பேதுமின்றி ஓயாத தன் நடையாலேயே நாற்திசையும் கடந்தவர்.
ஒருவகையில், பூமிதானத்திற்காக இந்திய கிராமங்கள்தோறும் பாதயாத்திரை மேற்கொண்ட மகானின் பெயரை ஞாபகப்படுத்தி ‘குட்டி வினோபாஜி’ என அவரைக் கூறலாம்.
கொஞ்சம் தெரிந்தவராக இருந்தால்போதும், வழி தெருவில் சந்திப்போரை அவருக்கேயான நகைச்சுவை கலந்த அக்கறையுடன் விசாரித்து அன்பு பாராட்டாமல் நகரமாட்டார்.
உறவினர்கள் மற்றும் பிரியமானவர்கள் வீடுகளுக்கு அவர் செல்லும்போதுகூட, அவர் கையில் கொண்டுசெல்லும் பொருட்கள் பொதுவாக வித்தியாசமானது.
இல்லத்தரசிகளை மகிழ்விக்கும் காய்கறிகள், அரிசி, பருப்பு என சமையற்கட்டிற்குரிய பல வகையறாக்களை அது அடக்கியதாக இருக்கும்.
புறச்சூழல் காரணிகளால் வியாபார-தொழில் முயற்சிகளில் தன்மக்கள் நலிவுற்று சோர்வுற்ற ஒவ்வொரு தருணங்களிலும் சூழ்நிலைக்கு ஏற்ப சிறந்த மாற்றுத்திட்டங்களை ஆய்ந்து மற்றய புத்திரர்களின் உதவியுடன் அதனை ஒருங்கமைத்துக்கொடுத்து மீண்டும் அவர் தம் சொந்தக்காலில் நிற்கும் ஒரு சுபீட்ச வாழ்வை நோக்கிய பயணத்திக்கு வழிகாட்டியவர்.வேகத்துடனான விடாமுயற்சி, ஒரு விடயம் செய்கையில் அது பலருக்கும் பயனுறவேண்டும் என்ற நற்சிந்தை, நடிப்பேதுமின்றி நேசத்துடன் உறவு பேணும் தன்மை, எதையும் நேர்த்தியாய் செயும் திறன், இயலாத நிலையிலும் தவறாத கடமை, பகுத்துண்டு பல்லலுயிர் ஓம்பும் மாண்பு போன்றவை யாம் அமரரிடமிருந்து கற்கவேண்டிய உயரிய பண்புகள்.
பிள்ளைகளும், மருமக்களும் தாம் அமரருக்கு ஆற்றிய கடமைகளில் பெரும் திருப்தி கொள்ளலாம்.
இக்கால உலகில், முதுமையில் உழலும் ஒருவருக்கு அவர் அருகில் இருந்து உதவிசெய்ய இரத்த உறவுகளின்சேவை கிடைப்பது மிகவும் அபூர்வம்.
இவ்விடயத்தில் ராசா அதிஷ்டசாலியே.மண்ணுலகிற்குரிய பயனுறுவாழ்வை பொதுவாக ஒருவரிடம் எதிர்பார்க்கப்படுவதையும் தாண்டி சிறப்புற வாழ்ந்துகாட்டிய அமரனே! 18-03-2016ல் விண்ணுற்று உங்களுக்கென இடம்பிடித்த உங்கள் ஆருயிர்த் துணைவி மீனாம்பிகையோடு சேர்ந்து நீவிர் நித்திய அமைதியில் உறைவீராக!

பிற அறிவித்தல்கள்

  1. 24 ஜனவரி, 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.