ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

சிவகுரு புவனேந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவகுரு புவனேந்திரன்

டிஸ்னி உணவக உரிமையாளர்

வயது 732 ஆகஸ்ட், 1946 – 14 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
நாரந்தனை
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவகுரு புவனேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

எங்கள் அருமை சித்தப்பா உங்கள் பெருமைகளை
எங்கள் நினைவுகளில் சூடுகிறோம்..

முகம் மலர்ந்த பார்வையிலே
யுகம் புலர்ந்து போகிறது..
அகம் தளர்ந்த வேளையிலே
சோகம் கலந்து நீள்கிறது!

காலை நேரம் சேவல் கூவும்
கவலை தூற ஆவல் மேவும்!
மாலை வரும் பொன் வானம்
மாலை சூட முகத்தை தேடும்

நாரந்தனை காற்றினிலே..
நார் கோர்க்க வாழை மரங்கள்
உடல் சாய்த்து மடல் கொடுக்கும்
கடல் அலைகள் கிடு.. கிடுக்கும்!

நிரல்.. நிரலாய் முரல் மீன்கள்
குரல் முற்ற கத்துறது..
திரள்.. திரளாய் திரளி மீன்கள்
உப்பு நீரில் முட்டுறது!

தான்தோன்றி அம்மன் கோவிலிலே
மணி ஒலிகள் செவிகளிலே..
ஓயாமல் உங்கள் குரலை ஒலிக்க..
சுற்றும் பூமி சற்று நிற்கிறது!

ஒற்றை பனை மரத்தில்
நேற்றே... குருத்து விட்ட..
சின்னஞ்சிறு ஓலைகள்..
காற்றில் கீற்றிட...

தோரணங்கள் தந்த தென்னை மரம்
காரணங்கள் கேட்கிறது...
ஊர்சனங்கள் சொன்ன பின்பு
வேர் துடித்து அழுகிறது...

முகம் மலர்ந்த பார்வையிலே
யுகம் புலர்ந்து போகிறது..
அகம் தளர்ந்த வேளையிலே
சோகம் கலந்து நீள்கிறது!

நிழல் தந்த ஆலமரம்
சுழல் காற்றில் அசைவதில்லை
உமை பிரிந்த சோகத்தில் - எங்கள்
இமை காற்றில் அசைகிறது

புல்லாங்குழல் தந்த மூங்கில்கள்
புது ராகம் தேடுறது - உங்கள்
புகழ் சொல்ல தேவாரம் ஆகிறது
ஊர்.. முழுதும் பாடுறது

தேடி.. தேடி.. விழிகளில்
கூடி வரும் கண்ணீரும்
கோடி பெறுமே.. உங்கள் ஞாபக
சாலைகளில் தினம்- ஓடி வருமே

மண்வாசம் விண்மணக்க
பொன்பாசம் கண்கனக்க
ஊர் போற்ற வாழ்ந்தவரே
உத்தமரே போய் வாரும்

வட்ட நிலா விளக்கேற்ற
வண்ண தமிழ் மொழி போற்ற
பொட்டு வைத்து போறவரே
பத்திரமாய் போய் வாரும்

சந்தன பேழையிலே
நித்தியமாய் தூங்குகிற
சத்தியத்தின் நாயகனே- எங்கள்
கோமகனே போய்.. வாரும்

சிட்டுக்குருவிகள் சிறகடிக்க
பச்சைக்கிளிகள் கதைபேச
காகங்கள் கரைகிறது - எங்கள்
சோகங்கள் கரையவில்லை

மண்கிணற்றில் தவளைகள்
மனக்கிணற்றில் கவலைகள்
மணிக்கணக்கில் கத்துறதே- எங்கள்
மாணிக்கமே கேட்கிறதா

முகம் மலர்ந்த பார்வையிலே
யுகம் புலர்ந்து போகிறது
அகம் தளர்ந்த வேளையிலே
சோகம் கலந்து நீள்கிறது

"மழை தந்த வானுக்கு
பூமி சொல்லும் நன்றி
வளம் தந்த மண்ணுக்கு
பயிர்கள் சொல்லும் நன்றி
நிழல் தந்த மரங்களுக்கு
உயிர்கள் சொல்லும் நன்றி
வாழ்கை தந்த சித்தப்பாவுக்கு
நாங்கள் சொல்லும் நன்றி"

"சித்தப்பா உங்கள் சிரிப்பில்
முத்தாப்பாய் விரியும் முகத்தில்
முக்திக்கும் எங்கள் அகத்தில்
தித்திக்கும் உங்கள் ஞாபகங்களே
எத்திக்கும் எங்கள் வாழ்வின்
அரிதான பாசமுள்ள பொக்கிஷங்கள்"

உங்கள் நினைவுகளோடு வாடும்...
புவனேஸ்வரி தங்கராயாவின் பிள்ளைகள் மற்றும் பேரபிள்ளைகள்.

— குமார் குடும்பம்(பெறாமகன்-கனடா)

வாழ்க்கை வரலாறு

எம்மை பொறுத்தவரையில் வறுமை கோட்டில் வாழ்ந்த எங்கள் குடும்பத்தை மகிழ்ச்சி என்ற வீட்டில் வாழவைத்த பெருமை எங்கள் அருமை சித்தப்பாவையே சாரும். கருணையும் அன்பும் கொண்டு எம்மை அரவணைத்து ஏழ்மை என்ற எளிய வாழ்வியலை தன் கடின உழைப்பால் தோல் கொடுத்து உயர்த்திய பெருமை அவருக்கே சொந்தம். எங்கள் இன்றைய வளர்ச்சிக்கு வித்திட்டவரும் அவரே. எங்கள் வாழ்வின் முகமும் முகவரியும் அவரே.
நாங்கள் பிறப்பால் ஏழைகள் அல்ல, ஆனால் புவி சுற்றுகையின் கால சூழ்நிலைகளில் எமது குடும்பமும் வறுமை என்றால் என்ன என்ற பாடத்தை கற்றுக் கொள்ள நேரிட்டது. அந்த நேரத்தில் எமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போராடிய காலங்களில் எங்கள் சித்தப்பாவும், எங்கள் சிறிய தாயும் மற்றும் சகோதர சகோதரிகளும் எமக்கு செய்த உதவிகள் அளப்பரியது.

ஓர் இரு வார்த்தைகளில் எழுதி விடவோ, வாய் விட்டு சொல்லி விடவோ முடியாதது. ஆகையால் அவர்கள் எங்கள் மீது காட்டிய அன்பு பாசங்களையும் அவர்கள் எங்களுக்காக செய்த உதவிகளையும் நாம் மறைக்கவோ அல்லது என்றென்றும் மறக்கவோ முடியாது.
அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்று அடுத்த வீட்டுக்காரனே எட்டிப்பார்க்காத அந்தக்காலத்தில் தான் கொடுத்த வாக்கை புன்நனையோடு செய்து முடிக்கும் கருணையும், ஆற்றலும் எங்கள் சித்தப்பாவின் இன்முகத்தோற்றம். அதனால் தான் மாற்ற துணிகளின்றி தேற்ற துணிவுமின்றி ஆற்ற துணைகளின்றி கண்ணீரோடு வறுமையில் அல்லாடிய எங்கள் குடும்பத்தை தன் வாழ்க்கை படகில் ஏற்றி தன் இதயத்துடிப்பை துடுப்பாக்கி வெளிநாட்டுக்கு கொண்டு வந்து கரை சேர்ந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

தாங்க முடியாத சோகங்களோடு அவர் பிரிவோடு போராடும் இந்த நேரத்தில் நாம் அவர் எமது குடும்பத்தின் எதிர்காலத்திற்காக காட்டிய பரிவான அன்பையும் உரிமையோடு செய்த மதிப்பிட முடியாத உதவிகளையும் சீர்தூக்கி பார்க்கிறோம்.
தாய் தந்தையரை இழைந்து வாடிய எமக்கு எல்லா உறவினர்களும் நண்பர்களும் அன்பும் பாசமுமாய் இருக்கிறார்கள். நிறைய உதவிகள் செய்திருக்கிறார்கள். எல்லோரிடமும் ஏதோ ஒரு வகையில் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் எல்லோருக்குள்ளும் எங்கள் சித்தப்பா முற்றிலும் புதுமையானவர், அதனால் தான் நாம் ஏழு சகோதர சகோதரிகளும் எங்கள் சித்தப்பா சிறிய தாயிடம் அதிகமாகவே கடமை பட்டிருக்கிறோம். அதை எம்மால் இன்னும் பல பிறவிகள் எடுத்தாலும் திருப்பி கொடுக்க முடியாது.

பலகோடி மானிடர்கள் தோன்றி மறையும் இந்த பூமி பிரபஞ்சத்தில் சிறு நூறு மனிதர்களே மறைந்த பின்பும் பலகோடி மானிடர்களின் மனங்களில் நீங்காது நிலை பெறுகிறார்கள். அந்த வழியில் எங்கள் சித்தப்பாவும் எங்கள் இதயங்களில் நீங்காது நிறைவாக நிலை பெறுவார். அவர் பிரிவை மனித வாழ்வின் ஒரு மரணமாக நாம் பார்க்கவில்லை இன்றும் எங்களுக்குள் அவர் புனிதமாக வாழ்வதை பார்க்கின்றோம். அவர் பிரிவு ஒரு சாதாரண மரணமல்ல. அது மாதவம் பெற்ற மானிட குலத்திற்கே பேரிழப்பு. மனித நேயமுள்ள மனிதர்களுக்கு பெருந்துயர். மனசாட்சி உள்ள மனங்களுக்குள் ஒருவித பரிதவிப்பு. எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் சிறிய தாய்க்கும் சகோதர சகோதரிகளுக்கும் தாங்கவோ தூங்கவோ முடியாத துயரம் தோய்ந்த சோகம்.

உயரிய, உன்னதமான கணவரின் அன்பையும் பாசத்தையும் இழந்து தவிக்கும் எங்கள் அருமையுள்ள சிறிய தாய்க்கும் அருமையும் பெருமையுமான தந்தையை பிரிந்து தவிக்கும் எங்கள் பாசம் மாறாத சகோதர சகோதரிகளுக்கும் அவர்கள் குழைந்தைகளுக்கும் மற்றும் எங்கள் சித்தப்பாவின் உறவினர்கள், நண்பர்கள் யாவருக்கும் எங்கள் இதயங்கள் சுமக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கல்களையும் தெரியப்படுத்த விரும்புகிறோம்.
எங்கள் சித்தப்பா இறைவனடி சேர்ந்த 31ம் நாள் நினைவு பகிர்வில் அவர் எங்களோடு காட்டிய அன்பு பாசத்தையும் எங்களுக்காக செய்த அரிய உதவிகளையும் நாம் இன்று உங்களோடு பகிர்வதில் பெருமையும் மன நிறைவும் அடைகிறோம்.
தொடர்ந்து அவருடைய நினைவுகளோடு பயணித்து அவர் எங்களுக்காக செய்த உதவிகளுக்காகவும் எங்களுக்கு தந்த அன்பு பாசத்திற்காகவும் நாங்களும் மனிதர்களாக இந்த பூமி பிரபஞ்சத்தில் சிறந்த பண்பாளர்களாய் வாழ வழி செய்து கொடுத்த அற்புத உள்ளம் கொண்ட எங்கள் சித்தப்பாவுக்காக அவருடைய குடும்பத்திற்காகவும் எங்கள் சக்திக்குள் முடிந்த எதையும் செய்ய நன்றியுடனும் அன்புடனும் அர்ப்பணிப்புடனும் காத்திருக்கிறோம்.

"சித்தப்பா உங்கள் சிரிப்பில்
முத்தாப்பாய் விரியும் முகத்தில்
முக்திக்கும் எங்கள் அகத்தில்
தித்திக்கும் உங்கள் ஞாபகங்களே
எத்திக்கும் எங்கள் வாழ்வின்
அரிதான பாசமுள்ள பொக்கிஷங்கள்"

என்றென்றும் உங்கள் அன்பு பாசமுள்ள ஆத்மா சாந்தி அடையஎல்லாம் வல்ல அடியும் முடியும் அறியா இறைவனை வணங்குகிறோம்.

நன்றியுடன்: புவனேஸ்வரி தங்கராயாவின் பிள்ளைகள் மற்றும் பேரபிள்ளைகள்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 2 செப்டம்பர், 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.