1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலன் சுப்பிரமணியம்
பச்சிலைப்பள்ளி பிரதேச கூட்டுறவு முகாமையாளர், புதுக்குடியிருப்பு இணைய கூட்டுறவு முகாமையாளர், வடமாகாண பேரிணைய முகாமையாளர்
வயது 692 ஜூலை, 1950 – 28 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- குடத்தனை
- வாழ்ந்த இடம்
- முகமாலை, பரந்தன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குடத்தனையைப் பிறப்பிடமாகவும், முகமாலையை வசிப்பிடமாகவும், பரந்தனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலன் சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனால் என்ன
ஆயிரம் தான் கடந்து போனால் என்ன
அன்பான அப்பாவே உங்கள் பிரிவால் - நாம்
வாடுவதை யார் எடுத்துரைப்பார்கள்..
உறுதுணையாய் நானிருக்க
உற்ற துணையாய் நீங்கள் இருக்க
யார் கண் பட்டதுவோ- என்னை
பரிதவிக்க விட்டு எங்கு சென்றீர்கள் அப்பா!!!
ஒளிதரும் சூரியனாய்
இருள் அகற்றும் சந்திரனாய்
ஊர்போற்றும் நல்லவனாய்
பார் போற்றும் வல்லவனாய்
வாழ்வாங்கு வாழ்ந்து- எமையெல்லாம்
வாழவைத்த குல விளக்கே!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
பச்சைப் பசேல் என பார்க்கும் இடம் எங்கும் கண்களுக்கு குளிர்ச்சி தரும் இலங்கையின் மருதநிலம் கொண்ட வடமராட்சிப் பகுதியில் அமையப் பெற்ற குடத்தனை எனும் ஊரில் சீரும் சிறப்புடனும் விளங்கிய வேலன் சீதேவி தம்பதியினருக்கு 1950 ஆம் ஆண்டு ஆடி மாதம் இரண்டாம் திகதி ஏக புத்திரனாய் இம்மண்ணில் அவதரித்தார்.
குழந்தைப் பருவம் முதல் சிறுவயது வரை குடத்தனை ஆ.த.க. பாடசாலையில் கல்வியைக்கற்று விட்டு பின்னர் முகமாலையில் அம்பளவளை எனும் வனப்பு மிக்க கிராமத்தில் பெற்றோருடன் தன் வாழ்க்கையை தொடர ஆரம்பித்து வேம்போடுகேணி சி.சி.த.க பாடசாலையில் சிறப்பாக கற்று வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
விவசாயத்தையே முழுமுதல் வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த வேலன் குடும்பம் தங்களது ஒரே ஒரு மகனை அன்புடனும் பண்புடனும் வளர்த்து கல்வியில் ஓர் பெருந்தகை சிற்பியாக வரவேண்டும் என்ற கனவுடன் வளர்த்து வந்தார்கள். சிறப்பாகத் தன் கல்வியைக் கற்றுக்கொண்டிருக்கும் வேளையில் 15 வயதில் தன் தாயை எதிர்பாராமல் இழக்க நேரிட்டது. அதன் பின்னர் தந்தையுடன் சேர்ந்து தானும் வாழ்க்கைப் பயணத்தை தொடர வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிய போதும் தன் படிப்பிலும் குறைவிடாது தந்தையின் பாதி சுமையை தானும் ஏற்று வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தார்.
உயர் கல்விவரை உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் கற்றுக்கொண்டிருக்கும் போது குடும்ப நிலையை உணர்ந்து தனது உயர் கல்வியை இடைநிறுத்திவிட்டு 01.05.1972 இல் பணிக்கான தனது முதலடியை எடுத்து வைத்து பளை ப.தெ.வ.அ கூட்டுறவு சங்கத்தில் ஒரு சாதாரண பணியாளராக நிரந்தர நியமனம் பெற்றார். தனது கூர்மையானதும், நேர்மையான அறிவுத் திறமையாலும் தன் பணியை செவ்வனவே செய்துகொண்டிருக்கும் நிலையில் குறுகிய கால இடைவெளியில் பல பதவி நிலைகளை திறம்பட வகுத்து அனைவரிற்கும் அறிவுகளையும் பணியின் திட்டங்களையும் புகட்டும் ஓர் ஆசானாய்த் திகழ்ந்தார்.
இப்படி தன் பணியை செய்துகொண்டிருக்கும் போது செல்லத்தம்பி பாக்கியம் தம்பதியினரின் மூத்த மகளான சிவகாமியை 10.09.1975 இல் தன் வாழ்க்கை துணையாக கரம்பிடித்து இல்லற வாழ்க்கையினை ஆரம்பித்தார். இதன் பயனாக ஆறு பிள்ளை செல்வங்களை பெற்று தன்குடும்ப வாழ்க்கையை சந் தோசமாக வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் 1978 இன் நடுப்பகுதியில் தன் தந்தையை இழக்க நேரிட்டது. அந்த இழப்பையும் தாங்கி எதையும் தாங்கும் இதயமாய் தன் வாழ்க்கையை வாழத் தொடங்கினார்.
இந்தக் காலப்பகுதியில் தன் பிள்ளைகள் கல்வியில் சிறந்தவர்களாக வரவேண்டும் என்ற தன் விருப்பத்திற்கமைய சிறுவயதில் இருந்து கற்கை நெறிகளை சொல்லிக் கொடுப்பது மட்டுமல்லாமல் தன் பிள்ளைகள் போல் தான் வாழ்ந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கும் பணிமுடிந்து வந்து இரவு வேளைகளில் தன் வீட்டிலேயே தன்னால் இயன்ற கல்விகளை கற்பித்து ஓர் சிறந்த ஆசானாகத் திகழ்ந்தார்.
இப்படியாக காலங்கள் உருண்டோடிக் கொண்டிருக்கும் போது 1991 ஆம் ஆண்டு இன்னும் ஓர் படி உயர்ந்து நிரந்தர பொதுமுகாமையாளர் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டார். அன்றில் இருந்து தன் பதவி நிலையையும் தாண்டி எப்பொழுதும் போலவே ஓர் சாதாரண பணியாளராக எல்லோருடனும் பழகி அதிகாரத்தை பயன்படுத்தாது அன்பாகவும் பண்பாகவும் பேசி அனைவரின் ஒத்துழைப்புடன் தன் பணி சாராது சமூகப் பணிகள், சமயப் பணிகள் மற்றும் ஏனைய பணிகள் எதுவாயினும் அவைகளையும் சமமாக ஏற்றத்தாழ்வு இல்லாமல் தனக்கு இருக்கும் அறிவைக் கொண்டு செவ்வனவே செய்து அனைவரின் அன்பையும் பெற்றார்.
தன்பணியாக இருந்தாலும் ஏனைய இதர பணியாக இருந்தாலும் சிறு தொய்வுகூட இல்லாமல் செய்வதோடு மட்டுமல்லாமல் எங்கு பிழைகள் இருக்கின்றதோ அவற்றை யாராக இருந்தாலும் வெளிப்படையாகவும் நேராகவும் எடுத்துக் கூறி மீண்டும் அப்பிழைகள் வராத வண்ணம் நேர்மையான உள்ளத்தோடு தன் கடமைகளை செய்து கொண்ட தருணங்களில் பல தடவைகள் பணி இடங்களில் ஏற்றத்தாழ்வு, பணியிடை நீக்கம் போன்றவற்றை சந்தித்தார். இவ்வாறான இடர்கள் வந்த போதிலும் “வாய்மையே வெல்லும்” எனும் தாரக மந்திரத்தை நெஞ்சில் சுமந்து எதர்க்கும் துவண்டு விடாமல் மீண்டெழும் தன்னம்பிக்கையை என்றும் கைவிடாதிருந்தார்.
இவ்வாறு தன் வாழ்க்கையில் எந்த தடைவந்தாலும் அதை சவாலாக ஏற்று இன் முகத்துடன் வாழ்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் பணிமாற்றம் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து 1996 ஆம் ஆண்டின் முற்பகுதியில் வன்னிப் பகுதிக்கு வந்து தன் கடமையினை பெறுப்பேற்று செய்யத் தொடங்கினார். 25.01.1996 முதல் முல்லை மாவட்ட தெ.வ.அ.கூ சங்கங்களின் இணையத்தில் உதவிப் பொது முகாமையாளராகப் பொறுப்பேற்று செயற்படத்தொடங்கினார். இந்தக் காலப்பகுதி யாழிற்கும் வன்னிக்கும் தொலைத் தொடர்புகள் இல்லாத ஓர் சீரற்ற காலம் என்பதோடு யாழ் இடப்பெயர்வின் ஆரம்ப கால கட்டத்தில் குடும்ப நிலைகளை அறிந்து கொள்ள முடியாத காலமும் கூட. இதன்போது தன் எல்லா சுமைகளையும் கடவுள் ஒருவன் இருக்கிறான் என அவன் மேல் போட்டுவிட்டு வன்னியில் உள்ள புதுக்குடியிருப்பில் தனி ஒருவனாக சிறிது காலம் வசித்து வரும்போது போர் சற்று உக்கிரம் அடைய யாழில் இருந்து மக்கள் வன்னிக்கு இடம்பெயரத் தொடங்கினார்கள். இவ்வேளையில் தன் குடும்பத்தினரையும் தன்னுடன் ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கி குண்டு மழைகளுக்கு மத்தியிலும் பூநகரிக் கடலிலிருந்து கிளாலிக் கடல் நீரேரி கரைக்குச் செல்ல அவரிற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்து போதிலும் தன் உயிரையும் பணயம் வைத்து கிளாலிக் கரைக்குச் சென்று தன் குடும்பத்தினரையும் சில உற்றார் உறவினர்களையும் தேடிக் கண்டு பிடித்து எல்லோரையும் பத்திரமாக அழைத்துக் கொண்டு மீண்டும் பூநகரி நோக்கி புறப்பட்டு வன்னியில் உள்ள புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் தற்காலிக வீடமைத்து நிம்மதியாக ஓர் வாழ்க்கையை வாழத் தொடங்கினார்.
பின்னர் வன்னிப் பகுதியில் ஏற்பட்ட போர்க்கால வேளைகளில் மிகுந்த சிரமத்தின் மத்தியில் தன் பணியையும் குடும்பத்தையும் ஒரு குறையும் விடாது கவனித்து வந்தார். இப்படியே 30.10.2000 ஆம் ஆண்டுவரை உதவிப் பொது முகாமையாளராக தன் கடமைகளைச் திறம்படச் செய்ததால் 01.11.2000 இல் வடமாகாணப் பேரிணையத்தின் உள்துறை கணக்காளராகவும் தனது பணியினை திறமையாகச் செய்ததன் பயனாக அவ் இணையத்திலேயே பொது முகாமையாளராக பணி உயர்வு நியமனம் பெற்றார். இப்பணியில் தனது நீண்ட கால சேவை அனுபவத்தினாலும் கற்றறிந்த பல அறிவுகளைக் கொண்டும் பேரிணையத்தை மென்மேலும் வளர்ப்பதில் உறுதுணையாக நின்று உழைத்தார்.
இவ் இணையத்தில் முகாமையாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே அங்கேயே ஏனைய பணிகளான பதில் பொது முகாமையாளர், அங்கத்தவர் உறவு பயிற்சி உத்தியோகத்தர், கல்வி உத்தியோகத்தர் போன்ற பன்முக பணிகளையும் ஏற்று சலிக்காது செய்துவந்தார். இந்தக் காலப் பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு சமாதான காலமாக இருந்த படியினால் சங்கங்களுக்கும் பணி நிமித்தம் செய்து பல கடமைகளை நிறைவாகச் செய்து இணையத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றினார்.அப்படியே தன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் போது 01.06.2005 இல் தன் மூத்த மகளுக்கு வெளியூரில் வரன் அமைய அளவில்லா ஆனந்தம் கொண்டார். போதிய அளவு பணம் இல்லாவிட்டாலும் தன் மனைவியின் சிறந்த சேமிப்பால் தன் எண்ணம்போல் மகளின் திருமண வைபவத்தை நடத்தி முடித்து சந்தோசம் அடைந்தார். இதன் பலனாக பல இன்னல்களுக்கு மத்தியில் இருந்து இவரின் குடும்பம் சிறிது புத்துயிர் பெற்று வறுமை என்ற நிலை மறையத் தொடங்கியது.
இறைபத்தியுடன் வாழ்ந்த தனக்கு இறைவன் கொடுத்த பரிசு என மன உறுதியுடன் சந்தோசக் களிப்பில் வழ்ந்து வந்தார். இவ்வாறு வாழ்ந்து வரும்போது 2006 இல் படிப்படியாக சமாதனம் முறிந்து போர் மேகம் சூழ ஆரம்பித்தது. இவ்வாறான சூழ்நிலையிலும் பெரும் இடர்களுக்கு மத்தியில் தன் பணியையும் செய்து கொண்டு பரந்தன் சிவபுரத்தில் நிரந்தரமாக வசிக்க ஓர் வாய்ப்புக் கிடைத்ததால் அங்கு நிரந்தரமாக ஓர் மனையை அமைத்து வாழ்ந்து வந்தார். இவ்வாறு 01.11.2000 ஆண்டுதொடக்கம் பெரும் இடர்களையும் தடைகளையும் சவாலாக சுமந்து கொண்டிருக்கும் போது 12.09.2007 இல் தனது இரண்டாவது மகளுக்கு அவர்களின் விருப்பத்திற்கு இணங்க திருமணத்தை இருக்கும் பொருளாதார வசதியைக் கொண்டு சிறப்பாக நடாத்தி வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் போது போர் மேகங்கள் கடுமையாகி இடம்பெயர வேண்டிய நிலமை வர 20.11.2008 உடன் இடம்பெயர ஆரம்பித்தார். பரந்தனில் தொடங்கிய இவரது இடப்பெயர்வில் முதலாவதாக கண்ணகி நகரில் தற்காலியமாக வீடமைத்து சில மாதங்களே அங்கும் வாழ முடிந்தது. பின்னர் படிப்படியாக உடையார் கட்டு, சுதந்திர புரம், இரணைப்பாலை, வலைஞ்ஞர் மடம் முள்ளிவாய்க்கால் எனப் படிப்படியாக பெரும் சிரமத்திற்கு மத்தியிலும்; தன்குடும்பம், பிள்ளைகள் என அனைத்து மக்களோடும் மக்களாக இடம்பெயர்ந்து செல்லும்போது ஒவ்வொரு இடங்களிலும் பதுங்குகுழிகள் அமைத்து எத்தனை நாட்கள் இருக்க முடியுமோ அதுவரை இருந்துவிட்டு மறுபடியும் நகர்ந்தார்.
இவ்வாறு இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் போது தான் தனது இரண்டாவது புதல்வனான நிதர்சன் (கண்ணன்) என்பவரை 19.03.2009 அன்று செல்தாக்குதலில் இழக்க நேரிட்டது. எதையும் தாங்கும் இதயம் இதையும் தாங்கிக் கொண்டது. இப்படியே யுத்த மௌனிப்பின் இறுதி இடமான முள்ளிவாய்க்கால் வரை சென்று 16.05.2009 தொடக்கம் இராமநாதன் நலன்புரி முகாமில் பல சிரமங்களுக்கு, இன்னல்களுக்கு மத்தியில் சிறிது காலம் வாழ்ந்தார்
பின்னர் 28.11.2009 இல் நலன்புரி முகாமில் இருந்து உறவிணைப்பு மூலம் மீள்குடியேற்றம் கிடைக்கபபெற்ற நிலமையில் வெளியேறி வந்து பரந்தனில் இருக்க முடியாத சூழ்நிலையினால் உசனில் உள்ள தனது சிறிய தகப்பனார் (ப. சிதம்பரப்பிள்ளை) வீட்டில் வசித்து வந்தார். பின்னர் மானிப்பாயில் உள்ள தனது மனைவியின் இளைய சகோதரி (சுகன்யா) வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்தார். பின்னர் 2010 முற்பகுதியில் இருந்து மானிப்பாயில் புடவைநிலையம் ஒன்றில் கணக்கு மேற்பார்வையாளராக வேலை செய்ய வாய்ப்புக் கிடைத்ததால் அதையும் திறம்பட செய்து வாடகைக்கோர் வீடெடுத்து இருப்பதைக் கொண்டு. சந்தோசமாக தன் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் போது 2010 இறுதிப் பகுதியில் மீள்குடியேற்ற உதவிகள் கிடைக்கப் பெற தனது தற்காலிக வசிப்பிடமான பரந்தனுக்கு வந்து தனது முயற்சியால் சிறுமனை அமைத்து வாழத் தொடங்கினார்.
இவ்வாறு தன் வாழ்க்கைப் படகை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது தனது இளைய மகன் தான் விரும்பும் கல்வியை தொடரவும், தனது மூத்த மகனின் குடும்பத்தை பார்வையிடவும் 2012 இல் இளைய மகளையும் அழைத்துக் கொண்டு இந்தியா சென்றார். இந்தக் காலப் பகுதியில் அங்குள்ள வரலாற்று புராதன முக்கியத்துவம் வாய்ந்த தலங்கள், இடங்கள், என்பனவற்றை பார்வையிட்டு தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டார். இதில் புராதன வரலாறுகள், சித்தர்கள் பற்றி அவர் கொண்டிருந்த அறிவும் தெளிவாகவே புலப்பட்டது. காரணம் பார்வையிடும் ஒவ்வொரு இடங்களையோ அல்லது தலங்களையோ அங்குள்ள சிற்பங்களைக் காண்பித்து முழுமையான வரலாற்று விளக்கங்களுடன் விளங்கிய போது அங்கு நின்ற அந்நாட்டு முதியவர்களாலேயே வியர்ந்து பார்க்கப்பட்டார்.
பின்னர் குறுகிய காலம் இந்தியாவில் இருந்துவிட்டு தனது தாய்நாட்டிற்கு திரும்பி மனைவி மற்றும் இரண்டாவது மகள், இளைய மகள் பேரப்பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது தன் இளைய மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்து 12.01.2013 இன் தனது ஒன்று விட்ட சகோதரியின் மகனை மணம்முடித்து வைத்து இன்புற்றார். இவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கும் போது சிறு நோய்த் தாக்கத்திற்கு ஆளாகிய போதும் தன்னால் இயன்ற மட்டும் சமூகப் பணி, சமயப் பணி இவற்றிற்காக தன்னை ஒரு சமூக சேவையாளராக அர்ப்பணித்தார்.
இவர் செய்த பணிகள்
சமூகப் பணி
பச்சிலைப்பள்ளி அபிவிருத்தி சங்க நிர்வாக உத்தியோகத்தர், ஆலோசகர்.
முகமாலை பழைய கிராம அபிவிருத்தி சங்க செயலாளர்
பரந்தன் கற்பகதரு கப்புறுக்க புரவல சங்க தலைவர்.
சமயப் பணி
மாமுனை வீரபத்திரர் ஆலய பரிபாலன சபை போசகர்
முள்ளிவாய்க்கால் பத்திரகாளியம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர்
பரந்தன் சிவபுரம் அருள்மிகு முருகமூர்த்தி அலய பரிபாலன சபை போசகர்
ஆகிய பணிகளை மனமுவந்து செய்து வந்தார். இதில் பரந்தன் கற்பகதரு கப்புறுக்க சங்கத்தினுடைய தலைவராக செயற்படும் வேளையில் இங்கு வசிக்கும் மக்களுக்கு தென்னங்கன்றுகளும், பயன்தரும் மரங்களையும் வழங்கி பயனடையச் செய்தார். இதனால் அப்பகுதி மக்களின் அன்பைப் பெற்று அவர்களுக்கு ஓர் வழிகாட்டியாக திகழ்ந்தார் அத்தோடு அடுத்த பணியாக பச்சிலைப்பள்ளி பேரவையின் நிர்வாக செயலாளராக தெரிவு செய்யப்பட்டபின் அங்குள்ள தாய் தந்தையரை இழந்த பிள்ளைகளுக்கும், அங்கவீனமுற்ற பிள்ளைகளுக்கும் இலவச கணனிப் பயிற்சி வகுப்புகளும் தையல் பயிற்சிக்கான கற்கை நெறிகளையும் அவர்களின் வசதிக்கேற்ப ஒழுங்குபடுத்திக் கொடுத்தது மட்டுமல்லாமல் புலம்பெயர் நாட்டில் (லண்டன்) வசிக்கும் நலன் விரும்பிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களிடம் எடுத்துக்கூறி அதனூடாக கிடைத்த நிதியினை கொண்டு தையல் கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்குரிய சான்றிதழ்கள், மற்றும் தையல் இயந்திரங்களை பெறுவதற்கான வழியமைத்துக் கொடுத்தார்.
அதுமட்டுமல்லாது சமயப் பணியில் பரந்தன் சிவபுரம் முருகமூர்த்தி ஆலய பரிபாலன போசகராகச் செயற்பட்ட வேளையில் இக்கிராமத்தில் அழிவடைந்த நிலையில் இருந்த இவ் ஆலயத்தை அப் பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் புனரமைப்புச் செய்து பின்னர் கிராம சேவையாளருடன் பேசி புதிய நிர்வாகம் ஒன்றை 30.06.2019 இல் உருவாக்கி ஆலயத்தை சீராக செயற்பட வைத்தார் ஆதோடு நின்றுவிடாது இவ் ஆலயத்தை சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தில் ஓர் பதிவுள்ள ஆலயமாக மாற்றுவதற்கான முழு ஏற்பாடுகளையும் தானே முன்நின்று செயற்படுத்தி அதற்கென யாப்பு விதிகளை தானே இரவு பகலெனப் பாராது தயாரித்து 20.09.2019 இல் ஒன்று கூடலை ஏற்பாடு செய்து பொதுமக்கள் மத்தியில் அதனை தானே வாசித்து அவர்களுக்கு எடுத்துக்கூறி அதனை மக்கள் ஏற்றுக் கொண்டபின் சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி பதிவு செய்யப்பட்ட ஓர்ஆலயமாக மாற்றிக் கொடுத்த பெருமை என்றுமே இவரையே சாரும். இவ்வாறு சமூக சேவையினை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
இவ்வாறு தன்னை ஓர் சமூக சிற்பியாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் போது 2015 இல் மீள்குடியேற்றம் மனை அமைப்பதற்கான நிதி கிடைத்த போது அதை தனது நிரந்தர வசிப்பிடமான முகமாலையில் தன் எண்ணம் போல் வீடமைத்து வாழ ஆசைப்பட்ட போதிலும் போர்க்கால வடுக்களினால் பாதுகாப்பற்ற பிரதேசமாக அவ்விடம் அடையாளப் படுத்தப்பட்டு இருந்தமையால் வேறு வழியின்றி தனது தற்கால வசிப்பிடமான பரந்தனிலேயே மனையை அமைக்க வேண்டிய நிலைக்கு ஆளானார். அதனால் தனது எண்ணக் கனவிற்கேற்ப பிடித்த வடிவில் மீள்குடியேற்ற நிதிமற்றும்பிள்ளைகளின் நிதியுதவியுடன் மனையமைத்து சந்தோசமாக வாழ்ந்து வந்துகொண்டிருக்கும் போது நோய்கள் தாக்கம் சற்று அதிகரிக்க தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சைகளும் அவ்வவ்போது சத்திர சிகிச்சைகளும் என மாறி மாறி செய்யப்பட்ட போதினிலும் தன்னம்பிக்கையை கைவிடாமல் எதிர்கொண்டு வாழ்ந்து வந்தார்.
இப்படியே வாழ்ந்து வரும்போது 2017 முற்பகுதியில் தலையில் குருதிக் கசிவு ஏற்பட்டு அதற்கும் சிகிச்சை பெற்று சுகதேகியாக வாழ்ந்து வரும் நிலையில் அதேவருடம் இறுதிப் பகுதியில் மறுபடியும் தொகுதிப் பொரு நாளத்தில் இரத்தக் கசிவு ஏற்பட்டு கொழும்பு வரை சென்று சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பயனாக மீண்டும் புத்துயிர் பெற்று ஓர் சுகதேகியாக வாழ்ந்து வந்தார். இவ்வாறு தன் வாழ்க்கையினை மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என புலம்பெயர் தேசத்தில் உள்ள பிள்ளைகளுடன் தொலைபேசியில் உரையாடி தனது இன்ப துன்பங்களை பகிர்ந்தும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார். அதோடு தன் பேரப்பிள்ளைகளுடன் அவர்களின் வயதிற்கேற்ப தானும் மாறி அவர்களுடன் பேசி விளையாடி அவர்களை மகிழ்வித்து தானும் சந்தோசக் களிப்பில் வாழ்ந்து கொண்டிருந்தார்.
இவ்வாறு சந்தோசமாக தன் வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்தவர் சென்ற வருடம் தீபாவளியையும் அனைவருடனும் மகிழ்ச்சியாக கொண்டாடிவிட்டு இருந்தவர் மறுநாள் காலை 6.30 மணிக்கு தனது இயல்பு நிலையில் இல்லாது மாறி உடல் நிலைக் கோளாறு ஏற்பட்ட மயக்க நிலைக்கு உள்ளாகினார். உடனடியாக நோயாளர் காவுவண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பல்வேறுபட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் எதுவும் கைகூடாத நிலையில் இறுதியாக செயற்கைச் சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அதுவும் கைகூடாத நிலையில் 28.10.2019 காலை 11.00 மணியளவில் எம் அனைவரையும் இத்தரணியில் தவிக்க விட்டுவிட்டு திரு வேலன் சுப்பிரமணியம் அவர்கள் இறைவனடி சேர்ந்தார். பலமுறை முயன்று முயன்று தோற்ற காலனவன் இறுதியில் நோயெனும் பலவீனத்தின் ஊடாக வந்து தன் கடமையை முடித்து விட்டான்.
'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்'
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

